தெலுங்கு திரையுலகின் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காகப் புதிதாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி, சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.
படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்பதால் சினிமாவை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், அவர்களுக்கு உதவ பல்வேறு திரையுலகமும் களமிறங்கியுள்ளது. தமிழ்த் திரையுலகில் பெப்சி அமைப்பு வேண்டுகோள் விடுத்து, பல்வேறு திரையுலக பிரபலங்கள் நிதியுதவியாகவும், பொருளுதவியாகவும் செய்து வருகிறார்கள்.
தெலுங்கில் முதல் நபராகத் தொழிலாளர்களுக்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி என்று அறிவித்தார் சிரஞ்சீவி. அதனைத் தொடர்ந்து பல்வேறு நடிகர்களும் உதவிகள் செய்து வந்தார்கள். தற்போது தொழிலாளர்கள் நலனுக்காக அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது தெலுங்கு திரையுலகம்.
இது தொடர்பாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"சினிமா பணியாளர்களை, குறிப்பாக துறையில் தற்போது அதிக ஆதரவு தேவைப்படும் தினக்கூலி பணியாளர்களுக்கு உதவ நாங்கள் 'கரோனா நெருக்கடிக்கான தொண்டு அமைப்பை' ஆரம்பித்திருக்கிறோம்.
எங்கள் கோரிக்கையை ஏற்று இதுவரை 3.8 கோடி ரூபாய் சேர்ந்திருக்கிறது. இதில் ஜூனியர் என்.டி.ஆரின் 25 லட்சம் ரூபாய், நாகார்ஜுனாவின் 1 கோடி ரூபாய், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் ராணா, வெங்கடேஷ, தக்குபாடி ஆகியோரின் 1 கோடி ரூபாய், மகேஷ் பாபுவின் 25 லட்சம் ரூபாய், ராம் சரணின் 30 லட்சம் ரூபாயும் அடக்கம். அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த உடனடித் தேவைக்குப் பங்காற்றுமாறு திரைத்துறையைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் இந்தத் தொழிலாளர்களால் தான் துறை இயங்குகிறது."
இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நிவாரண நிதி, ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்த பிரபலங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.
அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் "பிரபாஸ் 4 கோடி ரூபாய், பவன் கல்யாண் 2 கோடி ரூபாய், அல்லு அர்ஜுன் 1.25 கோடி ரூபாய், மகேஷ் பாபு 1 கோடி ரூபாய், ஜுனியர் என்.டி.ஆர் 50 லட்ச ரூபாய், ராம் சரண் 70 லட்ச ரூபாய், நிதின் 20 லட்ச ரூபாய், சாய் தரம் தேஜ் 10 லட்ச ரூபாய் மற்றும் இதர நண்பர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கும், தெலங்கானா மற்றும் ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளனர்.
அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது முதலில் வந்து நின்று உதவும் இந்தத் துறையில் ஒருவனாக இருப்பதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்