கரோனா வைரஸ் பாதிப்புக்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு 1கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் பிரபாஸ்.
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 694 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இதுவரை பவன் கல்யாண் 1 கோடி ரூபாய், மகேஷ் பாபு 1 கோடி ரூபாய், ராம் சரண் 70 லட்ச ரூபாய், நிதின் 20 லட்ச ரூபாய், வருண் தேஜ் 10 லட்ச ரூபாய் எனத் தொடங்கி பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து முதல்வர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளித்துள்ளார் 'பாகுபலி' படத்தின் நாயகன் பிரபாஸ். தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டுத் திரும்பியிருப்பதால், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் பிரபாஸ் என்பது நினைவுகூரத்தக்கது.