தென்னிந்திய சினிமா

கரோனா வைரஸ் பாதிப்பு: மகேஷ் பாபு ரூ.1 கோடி நிதியுதவி

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்புக்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 681 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இதுவரை பவன் கல்யாண் ரூ.1 கோடி, ராம்சரண் ரூ.70 லட்சம், நிதின் ரூ.20 லட்சம் என தொடங்கி பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

தற்போது மகேஷ் பாபுவும் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக மகேஷ் பாபு தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"கரோனா தொற்று பிரச்சினையைச் சமாளிக்க நமது அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். அவர்களுக்கு இந்த போராட்டத்தில் உதவ எனது பங்களிப்பைச் செய்ய முடிவு செய்துள்ளேன். ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை அளிக்கிறேன். யாருக்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அவர்களெல்லாம் முன் வந்து தங்களால் முடிந்த நிதியுதவியைத் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு பங்களிப்பும் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

ஒரு பொறுப்பான குடிமகனாக, விதிகளைப் பின்பற்றி இந்த ஊரடங்குக்கு ஆதரவும் தருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த கடினமான காலகட்டத்தில் நாம் ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து நம்மைச் சேர்ந்தவர்களைக் காக்க வேண்டும். மனிதம் எழும், நாம் இந்தப் போரில் வெல்வோம். அதுவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்"

இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT