21 நாட்கள் ஊரடங்கு பின்பற்றி வரும் வேளையில், வீட்டிலிருக்கும் பெண்களுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸின் தாக்கத்தால் இந்தியாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 700-ஐ நெருங்குகிறது. கரோனா வைரஸைத் தடுக்கும் போரில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று (மார்ச் 25) சமூகவலைதளத்தில் இணைந்த சிரஞ்சீவி, தனது பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"அனைவருக்கும் உகாதி வாழ்த்துகள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாம் ஊரடங்கில் இருப்பதால் இந்த உகாதி பண்டிகையை நம்மால் கொண்டாட முடியவில்லை. அனைவருக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து உங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வைரஸை உங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று விட வேண்டாம். உங்கள் அனைவரிடமும் மனதார கேட்டுக் கொள்கிறேன். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.
இந்த ஊரடங்கின்போது, வீட்டில் இருக்கும் அனைத்துப் பெண்களும், முடிந்தவரையில் வீட்டில் இருக்கும் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பயன்பாட்டில் மிகவும் சிக்கனமாக இருங்கள். உணவை வீணடிக்காதீர்கள், தினமும் புது உணவைத்தான் உண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மீதமுள்ள உணவுகளைத் தூக்கி வீசாதீர்கள். நம் பாட்டியும் அம்மாவும் செய்ததைப் பின்பற்றுங்கள். அதையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து சிக்கனமாக இருங்கள்.
அவசியமில்லாமல் பொருட்களை வீணாக்காதீர்கள். பொருட்களை வாங்கக் கடைகளில் கூட்டம் கூடாதீர்கள். 3 வாரங்களுக்கு எது தேவையோ அந்தப் பொருட்களை மட்டும் வாங்குங்கள். நாம் இந்தியர்கள். இந்தியாவில் கரோனா வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே நாம் அதை அழிக்க ஒன்றாகச் சேர்ந்து போராட வேண்டும். தடயமே இல்லாமல் அந்த வைரஸ் அழிந்து போகவேண்டும். 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்த நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. தெலங்கானா, ஆந்திர முதல்வர்களுக்கும் நன்றி. உடல்நலத்தைக் கவனத்தில் கொண்டு வீட்டில் இருங்கள். ஜெய்ஹிந்த்".
இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.