தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அசுரன்' படத்தின் கன்னட ரீமேக் உறுதியாகி இருக்கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அசுரன்'. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.
தற்போது இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி, அதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடித்து வருகிறார். கரோனா முன்னெச்சரிக்கையாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னட ரீமேக் உரிமைத் தொடர்பாக கடும் போட்டி நிலவியது. இறுதியாக இந்தப் படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தை ஜேக்கப் வர்கீஸ் இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. யார் தயாரிக்கவுள்ளார் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜோகி' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான 'பரட்டை என்கிற அழகுசுந்தரம்' படத்தில் நாயகனாக நடித்தார் தனுஷ். இப்போது தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தின் கன்னட ரீமேக்கில் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.