தென்னிந்திய சினிமா

கரோனா முன்னெச்சரிக்கை: 'ஆர்.ஆர்.ஆர்' நாயகர்களின் 10 அறிவுரைகள்

செய்திப்பிரிவு

கரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 'ஆர்.ஆர்.ஆர்' நாயகர்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இருவரும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்தியா முழுவதும் திரையரங்குகள், கல்விக்கூடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் நாயகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து கூட்டாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ பதிவு 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜூனியர் என்.டி.ஆர் - ராம்சரண் இருவரும் பேசியிருப்பதாவது:

''அனைவருக்கும் வணக்கம்.

உலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால் கோவிட்-19 தொற்றிலிருந்து நீங்கள் உங்களை எளிதில் பாதுகாத்துக் கொள்ளலாம்.

* கைகளைச் சோப்பை வைத்து, முழங்கை வரை முழுமையாகக் கழுவுங்கள். நகத்துக்கு அடியிலும் சுத்தம் செய்வது அவசியம்.

* வெளியில் சென்று வீடு திரும்பும்போது, சாப்பிடும் முன் என ஒரு நாளைக்கு 7-8 முறை கழுவுங்கள்.

* இந்த கரோனா கிருமி பிரச்சினை தீரும் வரை மற்றவரைச் சந்திக்கும்போது அவர்களுக்குக் கை கொடுப்பது, கட்டிப்பிடிப்பது ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

* அநாவசியமாக உங்கள் கண்களை, மூக்கை அடிக்கடி தொடாதீர்கள். வாய்க்குள் விரல்களை வைக்காதீர்கள்.

* ஜலதோஷம், ஜுரம், இருமல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் மட்டுமே முகக் கவசம் அணியுங்கள். இவை இல்லாமல் முகக் கவசம் அணிவதும் கோவிட்-19 தொற்று ஏற்படும் வாய்ப்பை உண்டாக்கும்.

* தும்மும்போதும், இருமும்போதும் மூக்கை/ முகத்தைக் கைகளால் மூடாமல், உங்கள் கையை மடக்கி முழங்கையால் மூடுங்கள்.

* அதிக கூட்டம் இருக்கும் இடங்களுக்குச் செல்லாதீர்கள். நிறையத் தண்ணீர் பருகுங்கள். வெந்நீராக இருப்பது நலம். ஒரேயடியாக அதிக தண்ணீர் பருகாமல் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகப் பருகுவதும் நல்லது.

* வாட்ஸ் அப்பில் வரும் எல்லா தகவல்களையும் நம்பாதீர்கள். அவற்றை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கும் அனுப்பாதீர்கள். ஏனென்றால் அவை தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும். இது கிருமித் தொற்றை விட பயங்கரமானது.

* www.who.int என்ற இணையதளத்திலும் நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளலாம். அரசாங்கம் கோவிட் - 19 குறித்துத் தொடர்ந்து செய்திகளையும், யோசனைகளையும் வழங்கி வருகிறது. அவற்றைப் பின்பற்றி நம்மை நாமே காத்துக் கொள்வோம்.

* சுகாதாரத்தோடு இருங்கள்... பாதுகாப்பாக இருங்கள்’’.

இவ்வாறு 'ஆர்.ஆர்.ஆர்' நாயகர்கள் பேசியுள்ளனர்.

SCROLL FOR NEXT