'அலா வைகுந்தபுரமுலோ' பாடல்கள் அமேசான் மியூஸிக் தளத்தில் புதிய சாதனையைப் படைத்துள்ளன.
அல்லு அர்ஜுன் நடிப்பில், த்ரிவிக்ரம் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வந்த படம் ’அலா வைகுந்தபுரமுலோ’. குடும்ப உறவுகள், சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்ஷன் என தரமான பொழுதுபோக்குப் படமாகப் பாராட்டப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட ரூ.250 கோடி வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது.
படம் வெளியாகும் முன்னரே தமன் இசையில் பாடல்கள் ஹிட்டடித்தன. படத்தின் பெரிய வெற்றிக்குப் பாடல்களும் ஒரு முக்கியக் காரணம். இன்று வரை இந்தப் படத்தின் பாடல்கள் பல்வேறு இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் அதிகம் கேட்கப்படும் பாடல்களாக முன்னணியில் இடம் பெற்று வருகின்றன.
குறிப்பாக அமேசான் மியூஸிக் தளத்தில் ’சாமஜவரகமனா’, ’ராமுலோ ராமுலா’, ’புட்ட பொம்மா’ ஆகிய மூன்று பாடல்களும் முதல் 10 பாடல்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஒரே படத்தைச் சேர்ந்த 3 பாடல்கள், அமேசானின் டாப் 10 பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதல் முறை.
முன்னதாக ஜியோ சாவன் செயலியில் 10 கோடி முறைக்கும் மேலாகக் கேட்கப்பட்ட முதல் தென்னிந்திய ஆல்பம் என்ற சாதனையை ’அலா வைகுந்தபுரமுலோ’ பெற்றது. வின்க், ஸ்பாடிஃபை, கானா உள்ளிட்ட மற்ற ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இந்தப் படத்தின் பாடல்கள் முன்னணியில் உள்ளன.