தென்னிந்திய சினிமா

வெறுப்பாளர்களுக்கு வெற்றியின் மூலம் பதிலடியா? - ரசிகரின் கேள்விக்கு தமன் பதில்

செய்திப்பிரிவு

வெறுப்பாளர்களுக்கு தன் வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்ததாக ரசிகர் எழுப்பிய கேள்விக்கு தமன் பதிலளித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் தமன். ஆனால், சமீபத்தில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பாடல்கள் மூலம் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார் தமன்.

தற்போது தெலுங்கில் பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் தமன். இதனிடையே திரையுலக பிரபலங்கள் பலருமே 'அலா வைகுந்தபுரம்லோ' பாடல்களுக்கு தமனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், சமூக வலைதளத்திலும் தமனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இதில் ரசிகர் ஒருவர், "’அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் உன்னதமான வெற்றியின் மூலம் வெறுப்பாளர்களின் வாய்களை அடைத்ததற்குப் பாராட்டுக்கள் தமன் அண்ணா, உங்களுடைய எதிர்காலம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள், தொடர்ந்து முன்னேறுங்கள், பவன் கல்யாண் படத்துக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக தமன், "வெறுப்பு எதுவும் இல்லை சகோதரா. எல்லாம் நாம் கடந்தகாலத்தில் செய்த தவறுகள்தான். அனைவரும் தங்களுடைய உணர்வுகளுக்கு எப்போதும் உண்மையாக இருப்பார்கள். படங்களையும் அவற்றின் வகைகளையும், என்னுடைய வேலையில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றியும் நான் புரிந்து கொண்டேன். இவையெல்லாம் மாற்றம் ஏற்படுவதற்காக நம் வாழ்வில் வரும் முதிர்ச்சி. நான் மகிழ்வாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் தமன்.

SCROLL FOR NEXT