'அசுரன்' தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளார்கள் என்பது முடிவாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இந்தியத் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் வெற்றிமாறனை அழைத்துப் பேசினார்கள்.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்து, இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றும் போட்டி நடந்தது. இதன் தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரிக்க, வெங்கடேஷ் நாயகனாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு உண்டானது. முதலில் ஸ்ரேயாவின் பெயர் அடிபட்டது. ஆனால், அவர் மறுப்பு தெரிவித்துவிட்டதாகத் தகவல் வெளியானது. தற்போது மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்கவுள்ளது உறுதியாகிவிட்டது. இந்த ரீமேக்கில் கென் கருணாஸ் கதாபாத்திரத்தில் அவரே நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.