தென்னிந்திய சினிமா

’பிங்க்’ தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கியது; ஒரேநாளில் புகைப்படம் லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

’பிங்க்’ தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கிய ஒரேநாளில் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பிங்க்'. இந்தப் படத்தை, குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலகப் பிரபலங்கள் வரை அனைவரும் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து ‘பிங்க்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து வாங்கினார் போனி கபூர்.

தமிழில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க, 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் ரீமேக்கைத் தொடர்ந்து, தெலுங்கில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

அரசியலுக்காகத் திரையுலகில் இருந்து ஒதுங்கிய பவன் கல்யாண், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்குள் நுழைகிறார். தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் போனி கபூர். இப்படத்தை வேணு ஸ்ரீராம் இயக்கி வருகிறார். இதில் பவன் கல்யாணுடன் அஞ்சலி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட பவன் கல்யாணின் புகைப்படங்கள் இணையத்தில் நேற்று வெளியாயின. படப்பிடிப்பு தொடங்கிய ஒரேநாளில் படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT