நிறைய யோசனைகளின் கலவையே ’டிஸ்கோ ராஜா’ என்று இயக்குநர் வி.ஐ.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ரவிதேஜா நடிப்பில் ஜனவரி 24-ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘டிஸ்கோ ராஜா’. 80-களில் நடக்கும் இந்தக் கதையில் அறிவியல் புனைவு விஷயங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் வி.ஐ.ஆனந்த்.
இந்தப் படம் குறித்து ஆனந்த் அளித்துள்ள பேட்டி:
" ‘டிஸ்கோ ராஜா’ என்கின்ற கதை என்னிடம் இருக்கிறது என்று நான் அவரிடம் சொன்னபோது அவரை என்னை முழுதாக விவரிக்கச் சொன்னார். ‘டைகர்’ படம் வெளியான பிறகு அதை முதலில் பாராட்டிய நடிகர்களில் ரவிதேஜாவும் ஒருவர். நான் எப்போதுமே ஒரு (அறிவுசார்) கருத்தை மையமாக வைத்தே எடுப்பேன். அது வழக்கமாக அவர் நடிக்கும் படங்களின் பாணி கிடையாது. ஒரு அறிவியல் புனைவுக் கதையான இதில் அவர் வியாபாரமும், கருத்தும் எங்கு சமநிலையில் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார். அவர் வித்தியாசமான கதையை எதிர்பார்த்திருந்தார். நான் சரியாக அந்த நேரத்தில் அவரைச் சந்தித்திருக்கிறேன்.
எப்படி இருந்தாலும் ஒரு படம் பொழுதுபோக்காக இருக்க வேண்டும். நான் நிறைய யோசனைகளைக் கலந்து முயன்றேன். அது சுவையாக இருக்கிறது. மக்களும் அதை விரும்புவார்கள் என்று நினைத்தேன். அந்த ஒரு கருத்தோடு மட்டுமே நின்றுவிடாமல் அடுத்த விஷயத்துக்குப் பார்வையாளர்கள் நகர்ந்து விடுவார்கள். இருந்தாலும் அந்தக் கருத்து இல்லையென்றால் திரைப்படம் கிடையாது. அது ஆர்வத்தைத் தராது.
பாபி சிம்ஹா இந்தப் படத்தின் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது தோற்றம், நுட்பம் இரண்டும் இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்தது. அவர் சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தெலுங்கு பேசுகிறார். ஆனால், ஹைதராபாத்தில் பேசுவது போலப் பேசுவதில்லை.
படத்தில் நகைச்சுவை நடிகர் வெண்ணிலா கிஷோரின் கதாபாத்திரத்துக்கும் ஒரு காரணம் உண்டு. ஆனால் நான் கதைச் சுருக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தால் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். அதனால் என்னால் இப்போது எதையும் சொல்ல முடியாது. படத்தின் போஸ்டரில் இருக்கும் வண்ணத்துப்பூச்சி படத்தின் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிக்கிறது".
இவ்வாறு வி.ஐ.ஆனந்த் தெரிவித்தார்.