தென்னிந்திய சினிமா

'ஆர்ஆர்ஆர்' படத்தில் நானா? - சுதீப் மறுப்பு

செய்திப்பிரிவு

'ஆர் ஆர் ஆர்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக வெளியான செய்திக்கு நடிகர் சுதீப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் , அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமான அரங்குகளிலும், வெளிநாட்டிலும் நடைபெற்றது.

இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவு பெறவில்லை. ஆனால், இந்தப் படம் அறிவிக்கப்பட்ட போதே ஜூலை 30, 2020-ல் வெளியீடு எனப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், படப்பிடிப்பு தாமதம் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் தாமதத்தால் அக்டோபர் வெளியீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக சுதீப் நடித்து வருவதாகவும், படக்குழுவினர் அணுகிய போது கதையே கேட்காமல் ஒப்புக் கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனை நடிகர் சுதீப் தனது ட்விட்டர் பதிவில் மறுத்துள்ளார்.

'ஆர் ஆர் ஆர்' செய்தி தொடர்பாக சுதீப், "இந்தப் படக்குழுவினர் மீது மிகவும் மதிப்பு வைத்துள்ளேன். பலரும் இந்தச் செய்தியைக் கேட்டு சந்தோஷமாகி இருப்பீர்கள். ஆனால், இதில் உண்மையில்லை என்பதை உங்கள் அனைவரது கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். என்னை யாருமே அணுகவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT