'அலா வைகுந்தபுரம்லோ' படம் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் வசூல் சாதனையை நிகழ்ச்சி வருவதால் அல்லு அர்ஜுன் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. இந்தப் படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சங்கராந்திக்கு வெளியான படங்களில் இந்தப் படத்தின் வசூல் தற்போது வரை குறையாததால், வசூல் சாதனை புரியும் என்று கருதுகிறார்கள் விநியோகஸ்தர்கள்.
அமெரிக்காவில் இந்தப் படம் இப்போதே 2.1 மில்லியன் டாலர் வசூலைக் கடந்துள்ளது. இதுவே இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 14.92 கோடி ரூபாயாகும். ஆஸ்திரேலியாவில் 1.99 கோடி ரூபாயும், இங்கிலாந்தில் 84.23 லட்ச ரூபாயும் வசூல் செய்துள்ளது. அல்லு அர்ஜுன் படங்களில் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த படமாக 'அலா வைகுந்தபுரம்லோ' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், த்ரிவிக்ரம் படங்களில் 2 மில்லியன் டாலர் வசூலைத் தாண்டிய படமாக இது அமைந்துள்ளது.
ஆந்திராவில் இந்தப் படம் மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகள் மட்டுமன்றி, அனைத்து ஒற்றை திரையரங்குகளிலும் நல்ல வசூல் செய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் விநியோகஸ்தர்கள் முதலீடு செய்த தொகையைத் தாண்டியுள்ளது. இதனால், பலரும் லாப நிலைக்கு வந்துள்ளார்கள். தற்போது வரை ஆந்திராவில் மட்டும் இந்தப் படம் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசூலால் பெரும் மகிழ்ச்சியில் உள்ள அல்லு அர்ஜுன், தனது சம்பளத்தைக் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.
மேலும், 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் மிகப்பெரிய வெற்றியால் அல்லு அரவிந்த், அல்லு அர்ஜுனுக்கு சம்பளத் தொகையாக 12 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெற்றி தொடர்பாக அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பதிவில், " ‘அலா வைகுந்தபுரம்லோ’ பாடல்களில் 2 பாடல்கள் ஒரு மில்லியன் லைக்குகளை யூடியூப் சேனலில் பெற்றுள்ளது. இந்தச் சாதனைக்கு நன்றி. மேலும், வாழ்நாள் பரிசுக்கு நன்றி தமன். திரையரங்குகளில் 1000-க்கும் மேற்பட்டோர் படம் பார்க்கிறார்கள், பலரும் பாராட்டுகிறார்கள், கோடிகளில் வசூல் இதெல்லாம் தாண்டி அனைவரது அன்பும் ஆசிர்வாதமும். கண்டிப்பாக நீங்கள் கொடுத்த வெற்றியைக் கொண்டாட வேண்டும். உங்கள் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் வெற்றியைப் படக்குழு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே கடற்கரையில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 24-ம் தேதி திருப்பதியிலும், தொடர்ச்சியாக கர்நாடகா மற்றும் கேரளாவிலும் வெற்றி விழாவினை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.