தென்னிந்திய சினிமா

நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை சோதனை

செய்திப்பிரிவு

நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கன்னட மொழியில் அறிமுகமான ராஷ்மிகா பின்னர் தெலுங்குத் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். சில வருடங்களிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். தற்போது மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கும் ’சரிலேரு நீக்கெவ்வரு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் கார்த்தியுடன் ’சுல்தான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இன்று (ஜனவரி 16) காலை 7.30 மணி முதல், கொடகு மாவட்டம் வஜ்ரபேட்டில் இருக்கும் ராஷ்மிகாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். ராஷ்மிகா தற்போது வீட்டில் இல்லை என்றும், படப்பிடிப்பில் இருப்பதாகவும் தெரிகிறது.

ராஷ்மிகாவின் தந்தைக்குச் சொந்தமான செரனிடி ஹாலிலும் சோதனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ராஷ்மிகாவின் பெயரில் இருக்கும் வங்கிக் கணக்கு மற்றும் சொத்து விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT