சிரஞ்சீவியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை என்று நடிகை விஜயசாந்தி கூறியுள்ளார்.
90களில் தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான, வெற்றிகரமான திரைப்பட ஜோடி சிரஞ்சீவியும் - விஜயசாந்தியும். இருவருமே அரசியலில் நுழைந்த பின்னர் நடிப்பை விட்டுவிட்டனர். எதிரெதிர் கட்சியில் இருவரும் இருந்த போது, சிரஞ்சீவிக்கு எதிரான விஜயசாந்தியின் கருத்துக்களால் இருவரது நட்பும் பாதிக்கப்பட்டது.
ஆனால் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என விஜயசாந்தி தெரிவித்துள்ளார். ’சரிலேரு நீக்கெவரு’ படத்தில் பல வருடங்களுக்குப் பின் நடித்துள்ளார் விஜயசாந்தி. இந்தப் படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிரஞ்சீவி. அந்த மேடையில் இருவருமே தங்களுடைய நட்பைப் புதுப்பித்துக் கொண்டனர்.
இதனிடையே பேட்டியொன்றில் சிரஞ்சீவி தொடர்பாக விஜயசாந்தி, “நாங்கள் அரசியலுக்குள் நுழைந்த பின் எங்களுக்குள் இருந்த தூரம் அதிகமானது. ஆனால் ’சரிலேரு நீக்கெவரு’ படத்தின் வெளியீட்டுக்கு முன்பான விளம்பர நிகழ்ச்சிக்கு அவர் விருந்தினராக வந்த போது எங்கள் வித்தியாசங்களை நாங்கள் பேசித் தீர்த்துக் கொண்டோம். சிரஞ்சீவி அவர்களை நீண்ட காலம் கழித்துச் சந்தித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.
'சரிலேரு நீக்கெவரு' படத்தில் தனது கதாபாத்திரத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி தருவதாகவும், நல்ல வலிமையான கதாபாத்திரங்களில் மட்டுமே தான் இனி நடிப்பேன் என்றும் விஜயசாந்தி கூறியுள்ளார்.