'ஸ்பைடர்' தோல்விக்குப் பிறகு மகேஷ் பாபுவின் செயல்பாடுகள் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான படம் 'ஸ்பைடர்'. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்தப் படம் தயாரானது. ஆனால், தெலுங்கில் படுதோல்வியைத் தழுவியது. தமிழிலும் எதிர்பார்த்த வரவேற்பு இந்தப் படத்துக்குக் கிடைக்கவில்லை.
இந்தப் படம் தோல்வியடைந்த போதிலும், மகேஷ் பாபு தனக்குத் தொடர்ச்சியாக அனுப்பிய மெசேஜ்கள் குறித்து நினைவு கூர்ந்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ், "படத்தை எடுக்கும்போதே, படம் உருவாகிக் கொண்டிருக்கும் விதத்தில் என்னமோ தவறு இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது என்ன என்பது பட வெளியீடு வரை எனக்குத் தெரியவில்லை.
’ஸ்பைடர்' படத்துக்குக் கிடைத்த ஏமாற்றமளிக்கும் வரவேற்பு என்னைப் பெரிய அளவில் பாதித்தது. ஆனால் மகேஷ் பாபு கருணையுடன் என்னுள் நம்பிக்கையை விதைத்தார். படம் வெளியான 10 நாட்கள் கழித்து என்னை அழைத்துப் படத்தின் தோல்வியை மனதுக்கு ஏற்றிக் கொள்ளாதீர்கள் என்றார். மெசேஜ் அனுப்பினார்.
ஒரு நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையே இருக்கும் உறவை வெற்றியே முடிவு செய்யும். இந்தத் துறையில் மகேஷ் பாபு அதிலிருந்து தனித்துத் தெரியும் தரமானவர்” என்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.
'தர்பார்' படமும் வெளியாகிவிட்ட நிலையில், விரைவில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது விஜய்யுடன்தான் இருக்கும் என்கிறார்கள் திரையுலகில்.