தென்னிந்திய சினிமா

'ப்ரதி ரோஜு பண்டகே' வெற்றி: இயக்குநருக்கு கார் பரிசு

செய்திப்பிரிவு

'ப்ரதி ரோஜு பண்டகே' படத்துக்குக் கிடைத்த பிரம்மாண்ட வெற்றியால், இயக்குநர் மாருதிக்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்கள் தயாரிப்பாளர்கள்.

மாருதி இயக்கத்தில் சாய் தரம் தேஜ், சத்யராஜ், ராஷி கண்ணா, முரளி ஷர்மா, ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ப்ரதி ரோஜு பண்டகே'. டிசம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்து வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

குடும்ப பின்னணியில் உருவான இந்தப் படம் உலகளவில் சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது. தற்போதும் பல திரையரங்குகளில் இந்தப் படம் திரையிடப்பட்டு வருகிறது. இரண்டு தயாரிப்பாளர்களுக்குமே நல்ல லாபம் கிடைத்துள்ளதால், இயக்குநர் மாருதிக்கு ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளது படக்குழு.

இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால், மாருதியின் அடுத்தப் படம் என்ன என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், பிரம்மாண்டமான கதையொன்று தயாராகவுள்ளதாகவும் அதைத்தான் அடுத்து படமாக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் மாருதி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT