'96' படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு 'ஜானு' எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '96'. இந்தப் படமும், பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றன. 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக் உரிமைகளுக்குக் கடும் போட்டி நிலவியது. இதன் தெலுங்கு ரீமேக் பிரேம் குமார் இயக்கத் தொடங்கப்பட்டது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த், த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது இந்தப் படத்துக்கு ’ஜானு’ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழில் நடித்த கெளரி கிஷண், அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளதைத் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். 'ஜானு' படத்தின் டீஸர் நாளை (ஜனவரி 9) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.