சங்கராந்தி வெளியீடு தொடர்பாகத் தொடர்ச்சியாக நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வந்த படமும், அனில் ரவிப்புடி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வந்த படமும் சங்கராந்தி வெளியீடு என்றே விளம்பரப்படுத்தி வந்தார்கள். ஆனால், இரண்டுமே பெரிய முதலீடு என்பதால் ஒரே தேதியில் வெளியாகாது என்பதை மட்டும் உறுதியாக நம்பினார்கள் விநியோகஸ்தர்கள்.
இரண்டு படங்களுமே ஜனவரி 12-ம் தேதி வெளியீடு என அறிவிக்கவே, விநியோகஸ்தர்கள் மத்தியில் கலக்கம் உண்டானது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் 'சரிலேரு நீக்கெவரு' படம் ஜனவரி 11-ம் தேதியும், 'அலா வைகுந்தபுரம்லோ' படம் ஜனவரி 12-ம் தேதியும் வெளியாகும் என முடிவு செய்யப்பட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் தணிக்கை பணிகள் வரை முடித்துவிட்டுப் படக்குழு. இதனால் இந்தப் படம் முன்பே வெளியாகக்கூடும் எனத் தகவல் பரவியதைத் தொடர்ந்து மீண்டும் சர்ச்சை உண்டானது. இதனால், எது முதலில் வெளியீடு என்பது தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டது.
இறுதியாக, முன்பு ஒப்புக் கொண்டதைப் போலவே 'சரிலேரு நீக்கெவரு' படம் ஜனவரி 11-ம் தேதியும், 'அலா வைகுந்தபுரம்லோ' படம் ஜனவரி 12-ம் தேதியும் வெளியாகும் என நேற்று (ஜனவரி 4) பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிவித்தார் தயாரிப்பாளர் தில் ராஜு. இதனால், மீண்டும் இந்தச் சர்ச்சை முடிவு வந்துள்ளது.