எனக்கும் நரேஷுக்கும் தான் பிரச்சினை. சிரஞ்சீவி, மோகன்பாபு ஆகியோருடன் எனக்கும் எவ்விதப் பிரச்சினையுமில்லை என்று நடிகர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
மா என்று அழைக்கப்படும் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சங்கத்தின் 2020-ம் ஆண்டுக்கான டைரி வெளியீடு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, மோகன்பாபு, முரளி மோகன், கிருஷ்ணம் ராஜு, ஜெயசுதா உள்ளிட்ட மூத்த நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பேச்சுக்குப் பதிலளிக்கும் வகையில், கதாசிரியர் பருசூரி கோபால கிருஷ்ணன் பேசுவதற்கான வாய்ப்பு வரும்போது சங்கத்தின் துணைத் தலைவர் நடிகர் ராஜசேகர் அவரைப் பேச விடாமல் அவரிடமிருந்து மைக்கைப் பறித்துப் பேச ஆரம்பித்தார். ராஜசேகர் மது போதையிலிருந்தார் என்பதை அவரது பேச்சு தெளிவாக உணர்த்தியது.
சங்கத்தில் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து என்னை வருத்தி வேலை செய்து வருகிறேன் எனத் தொடங்கி கடுமையாகச் சங்கத்தை விமர்சித்துப் பேசினார். அப்போது மோகன்பாபு, சிரஞ்சீவி இருவருமே தடுக்க முயன்ற போது ராஜசேகர் தன் பேச்சைத் தொடர்ந்தார். ராஜசேகரின் இந்தச் செயலால் கடுமையான கோபத்துக்கு ஆளான சிரஞ்சீவி, இப்படியான பொது நிகழ்ச்சிகளில் யாரும் நிதானத்தை இழக்கக்கூடாது என்று பேசினார். மேலும் ராஜசேகர் மீது சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து இன்று (ஜனவரி 2) நடிகர் ராஜசேகர் தனது நிர்வாகத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், தலைவர் நரேஷ் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேலும், ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டு தனது ட்விட்டர் பதிவில் ராஜசேகர், "இன்று நடந்த சம்பவங்கள் எனக்கும், ‘மா’-வுக்கும் நரேஷுக்கும் இடையிலானதே. இங்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. இப்படியிருக்கும்போது நான் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க முடியாது.
இதில் சிரஞ்சீவி, மோகன்பாபுவுடன் எனக்கு எந்த ஒரு கருத்து வேறுபாடோ, சண்டையோ இல்லை. விருந்தாளிகளுக்குச் சங்கடம் ஏற்படுத்தும் வகையில் நான் நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்கிறேன். ஆனால், நான் பேசுவதற்கு இதுதான் சரியான தருணம் என்று கருதினேன்.
நான் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்கிறேன். திரைப்படத் துறைக்கு நான் தனிப்பட்ட முறையில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். சிரஞ்சீவி, மோகன்பாபு மற்றும் எனக்குமிடையேயான தனிப்பட்ட சண்டையாக தயவுகூர்ந்து இதனை ஊதிப் பெருக்க வேண்டாம்.
இவர்கள் இருவர் மீதும், அமைப்புக்காக இவர்கள் ஆற்றிய பணிகள் மீதும் எனக்கு நிரம்ப மரியாதையும் மதிப்பும் இருக்கிறது. எனவே இந்தச் சம்பவத்தை வேறு மாதிரி திரிக்க வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனத் தெரிகிறது.