'மகாநடி' படத்துக்கான மெனக்கிடல் தொடர்பாகத் தேசிய விருது பெற்ற பின் கீர்த்தி சுரேஷ் பேட்டியளித்துள்ளார்.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லி விக்ஞான் பவனில் நேற்று (டிசம்பர் 23) நடைபெற்றது. விருதுகளைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கி சிறப்பித்தார். விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநடி (தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாரான படம்) படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது. தனது குடும்பத்தினர் முன்னிலையில் தேசிய விருதைப் பெற்றுக் கொண்டார் கீர்த்தி சுரேஷ்.
இதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதில், “தேசிய விருது பெறுவது கனவு என்பதைத் தாண்டி, இதைத் தான் அடைய வேண்டும் என ஆசைப்பட்டேன். இன்றைக்கு நடந்துள்ளது. ரொம்பவே சந்தோஷமாகவுள்ளது. பலரும் தொலைபேசியில் எப்படி ஃபீல் பண்ணுகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். அதை எப்படி வார்த்தைகளால் சொல்ல முடியும். இங்கு வந்து வாங்கும் போது தான், அதை உணரமுடியும். அப்பா - அம்மா முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.
நான் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறேன் என்பதைத் தான், எனக்கு வரும் கதைகளும் அப்படித்தான் இருக்கின்றன. 'பெண்குயின்', ரஜினி சார் படம், தெலுங்கில் 2 படங்கள் இருக்கிறது. அனைத்துமே வித்தியாசமாக அமைந்திருக்கிறது. அந்தப் படங்கள் வரும் போது, மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது தெரியும்.
சாவித்திரி அம்மாவுடைய வாழ்க்கை வரலாறு என்பதால் அவரைப் பற்றி நிறையப் படித்தேன். படங்கள் பார்த்தேன். அதைப் புரிந்து உள்வாங்கிப் பண்ணுவது ரொம்பவே சிரமம். இயக்குநர் நாகி ரொம்பவே உதவியாக இருந்தார். சாவித்திரி அம்மாவுடைய பெண் சாமுண்டீஸ்வரியிடம் நிறையப் பேசினேன். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததிற்குப் பின்னால், பெரிய மெனக்கிடல் இருக்கிறது. இன்னொருத்தருடைய கதாபாத்திரத்தில் நடிப்பதால், நமது மனதும் அதற்குத் தகுந்தாற் போல் வலுவாக இருக்க வேண்டும்.
படம் முடிந்தவுடன், டப்பிங் பண்ணுவதற்கும் சிரமமாக இருந்தது. தெலுங்கில் தான் நடித்தேன் என்பதால், அந்த மொழி அவ்வளவாகத் தெரியாது. சாவித்திரி அம்மா மாதிரியே பேசுவதற்கு நிறைய நாள் டப்பிங் பண்ணினேன். இன்றைக்கு அந்த மெனக்கிடல் முடிந்து படம் வெளியாகி, வெற்றி பெற்று, தேசிய விருது வாங்கியிருக்கேன் என நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. பெயருக்கு முன்னால் 'தேசிய விருது பெற்ற' என்ற வார்த்தையைப் பார்க்கும் போது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், இன்னொரு புறம் கூச்சமாகவும் இருக்கிறது” என்று பேட்டியளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.