தென்னிந்திய சினிமா

விஜய் சேதுபதியுடன் இணையும் மஞ்சு வாரியர்?

செய்திப்பிரிவு

மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிரதி பூவன்கோழி'. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவுற்று, டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து மஞ்சு வாரியர் நடிப்பில் 'ஜாக் அண்ட் ஜில்', 'மராக்கர்' ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கிறது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து ஆர்.ஜே.ஷான் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் மஞ்சுவாரியர். 2017-ம் ஆண்டு மஞ்சு வாரியர் நடித்த 'C/O சாயிரா பானு' படத்தின் கதையை எழுதியவர் ஆர்.ஜே.ஷான். தற்போது மஞ்சு வாரியர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்புச் செல்ல, ஆயத்தமாகி வருகிறது படக்குழு. இதில் பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.

முன்பாக 'மார்க்கோனி மித்தாய்' என்ற படம் மூலமாக மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார் விஜய் சேதுபதி. அவரது நடிப்பில் உருவாகும் 2-வது படமாக மஞ்சு வாரியர் நடிக்கவுள்ள படம் அமைந்துள்ளது. தற்போது தமிழில் 'தளபதி 64', 'துக்ளக் தர்பார்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'லாபம்' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

SCROLL FOR NEXT