நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட அவரது குடும்பத்தின் நடிகர்கள் அனைவருக்கும் ரசிகராக இருந்த நூர் பாய் காலமானார். அவருக்கு சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தை டோலிவுட்டில் மெகா ஃபேமலி என்றழைப்பார்கள். சிரஞ்சீவிக்கு மெகா ஸ்டார் என்ற பட்டம் இருப்பதால் இந்தப் பெயர். இவரது குடும்பத்திலிருந்து எண்ணற்ற நடிகர்கள் டோலிவுட்டில் அறிமுகமாகியிருக்கிறார்கள்.
சிரஞ்சிவீயின் சகோதரர்கள் நாகேந்திர பாபு, பவன் கல்யாண், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா, நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜ், மகள் நிஹாரிகா என அனைவரும் நடிகர்கள். சிரஞ்சிவீயின் மனைவி சுரேகா அல்லு ராமலிங்கைய்யா என்ற தெலுங்கு நடிகரின் மகள் தான். சுரேகாவின் சகோதரர் அல்லு அரவிந்த் (கீதா ஆர்ட்ஸ்) டோலிவுட்டில் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர். இவரது மகன்கள் அல்லு அர்ஜுன், அல்லு சிரீஷ் என இருவரும் நடிகர்கள். இந்த ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் நெருக்கமான ரசிகர் ஒருவர் இருக்கிறார், அவர் தான் நூர் பாய்.
சமீபத்தில் நூர் பாய் உடல்நலம் குன்றியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு இறுதி மரியாதை செலுத்த சிரஞ்சீவியும், அல்லு அர்ஜுனும் அவரது வீட்டுக்கே நேரடியாகச் சென்றுள்ளனர். இந்த புகைப்படங்களை சிரஞ்சீவி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். நூர் பாய் மருத்துவமனையில் இருக்கும்போது ராம் சரண் தேஜா வந்து பார்த்துள்ளார். ராம் சரண் தற்போது ராஜமௌலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் நூர் பாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.
ராம் சரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "ரசிகர்கள்தான் குடும்பம். எங்கள் குடும்ப உறுப்பினர் நூர் முகமது அவர்களின் இல்லாமையை நிச்சயம் உணர்வோம். அவரது நேர்மறை எண்ணமும், உதவும் குணமும் இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று பகிர்ந்துள்ளார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் ’அலா வைகுந்தபுரம்லோ’ என்ற திரைப்படத்தின் டீஸர் வெளியீடு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நூர் பாய் காலமானதைத் தொடர்ந்து, "ரசிகர் ஒருவரின் மரணம் குடும்பத்தில் ஒருவரை இழப்பதைப் போல. நூர் பாய் எங்கள் அனைவருக்கும் குடும்பம் போல. எதிர்பாராத சூழ்நிலையால் சில அறிவிப்புகளுக்கு இது சரியான நேரம் இல்லை என்று உணர்கிறோம். விரைவில் ’அலா வைகுந்தபுரம்லோ’ டீஸர் குறித்து விவரங்கள் வெளியிடுவோம்" என கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
மெகா குடும்பத்தினர் வருண் தேஜ், அல்லு சிரீஷ், சாய் தரம் தேஜ் எனப் பலரும் நூர் பாய் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். சிரஞ்சீவி ரசிகர்கள் பலரும் கூட இதற்கு வருத்தம் தெரிவித்து, பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு தருணங்களில் மெகா குடும்ப நட்சத்திரங்களுடன் நூர் பாய் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்