சட்டத்தை மதிக்காமல் எவ்வளவு தைரியமாக காவல் துறையால் செயல்பட முடிகிறது என்பதைக் கவனிக்க இது நல்ல நேரம் என்று ஹைதராபாத் என்கவுன்ட்டர் குறித்து தெலுங்கு நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா கருத்துத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது காவல்துறை.
நேற்று (டிசம்பர் 6) அதிகாலை குற்றவாளிகள் நால்வரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதுவும், பெண் மருத்துவர் இறந்த அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுன்ட்டருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும், ஹைதராபாத் காவல் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில் ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பாக, தெலுங்கு நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா தனது ட்விட்டர் பதிவில், "இது நீதியல்ல. சமாளிக்க முடியாத பொதுமக்களின் கோபத்தைத் தணிக்க வைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு வடிவம். குற்றம் நடக்காமல் தடுக்கும் வகையில் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலமாகத்தான் நீதி கிடைக்கும்.
இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காமல் எவ்வளவு தைரியமாக காவல் துறையால் செயல்பட முடிகிறது என்பதைக் கவனிக்க இது நல்ல நேரம். மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு குறைவான மதிப்பு இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள நல்ல நேரம்" என்று தெரிவித்துள்ளார் ராகுல் ராமகிருஷ்ணா.
தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி', 'பாரத் அனே நேனு', 'சம்மோஹனம்', 'கீத கோவிந்தம்', 'ஜெர்ஸி' உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.