வீடு குறித்த சர்ச்சை செய்திக்கு ஊடகங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது இந்தியில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சில காலங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் புதிய வீடு ஒன்றை ரகுல் ப்ரீத் சிங் வாங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
தற்போது இந்தியில் நடித்து வருவதால், ஹைதராபாத் வீட்டை விற்றுவிட்டதாகவும், பெங்களூருவில் புதிய வீடு ஒன்றை வாங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதை இணையத்தில் பலரும் பகிர்ந்தார்கள்.
இந்தச் செய்தி தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பதிவில், "செய்தியாளர்கள் என அழைக்கப்படுகிறவர்களுக்கு எங்கிருந்து செய்தி கிடைக்கிறது? அதற்கான ஆதாரங்கள் என்ன என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஹைதராபாத்தில் நான் வீடு வாங்கியபோது அது எனக்குப் பரிசாகக் கிடைத்தது எனக் கூறப்பட்டது.
தற்போது நான் பெங்களூருவில் ஒரு வீடு வாங்குவதற்காக அதை விற்றுவிட்டதாக வரும் செய்திகளைக் கேள்விப்படுகிறேன். நான் கூறுவதெல்லாம் ஊகங்களை நிறுத்திவிட்டு உண்மைச் செய்தியை வெளியிடுங்கள் என்பதுதான்" என்று தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.