தென்னிந்திய சினிமா

மிருகங்களுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?  - சிரஞ்சீவி கேள்வி

செய்திப்பிரிவு

மிருகங்களுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்று பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக சிரஞ்சீவி கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவுலு ஆகியோரைக் கைது செய்துள்ளது காவல்துறை.

பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சீரஞ்சிவி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:

''நான் ஒரு தகப்பனாக, சகோதரனாக ரியாக்ட் செய்கிறேன். என் இதயத்தில் குருதி வழிந்தோடுகிறது. மிருகங்களுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?. இதுபோன்ற மனிதத் தன்மையற்ற குற்றங்களைச் செய்வோரை பொது இடத்தில் தூக்கில் போடுவது பாவமில்லை.

குற்றவாளிகளுக்கு விரைவாகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். தங்கள் மொபைலில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100 மற்றும் ’ஹாக் ஐ’ ஆப் ஆகியவற்றைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அனைத்துப் பெண்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். பெண்களைப் பாதுகாப்பதும் மதிப்பதும் அனைவரது கடமை''.

இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT