தென்னிந்திய சினிமா

’ஆர்.ஆர்.ஆர்’ அப்டேட்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு

செய்திப்பிரிவு

ராஜமெளலி இயக்கி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது படக்குழு.

'பாகுபலி' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, ராஜமெளலி தனது அடுத்த படத்தின் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

'ஆர்.ஆர்.ஆர்' என்று தலைப்பிடப்பட்டுப் படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும், இன்னும் தலைப்பு என்ன என்பதை படக்குழு முடிவு செய்யவில்லை. பெரும் பொருட்செலவில் டிவிவி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தியாவில் ஹைதராபாத், புனே உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் வெளிநாடுகளில் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.

படப்பிடிப்புக்கு இடையே ராம் சரணுக்குக் காயம், ஜூனியர் என்.டி.ஆருக்குக் காயம், ஹாலிவுட் நாயகி டைய்சி விலகல் எனத் தொடர் பின்னடைவைச் சந்தித்தது படக்குழு. இதனைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் கதாபாத்திரத்துக்கு நாயகி இல்லாமல் கதையை ராஜமெளலி மாற்றிவிட்டார், வில்லனாக நடிக்கிறார் சமுத்திரக்கனி என பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. ஆனால், அனைத்துச் செய்திகளுக்குமே அமைதி காத்தது படக்குழு.

இந்நிலையில் நேற்று (நவம்பர் 19) 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் "'ஆர்.ஆர்.ஆர்' படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இந்த ஆண்டு மிகவும் தனித்துவமானது. 70% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக நடிப்பவரையும், வில்லனாக நடிப்பவரையும் நாளை அறிவிக்கவுள்ளோம்" என்று தெரிவித்தனர்.

அதன்படி, இன்று (நவம்பர் 20) மாலை ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் ஓலிவா மோரீஸ், வில்லனாக ஸ்காட் என்ற கதாபாத்திரத்தில் ரே ஸ்டீவன்சன் மற்றும் இன்னொரு வில்லியாக லேடி ஸ்காட் என்ற கதாபாத்திரத்தில் அலிசன் டூடியும் நடிப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இதன் மூலம், தங்களுடைய படத்தைச் சுற்றி வந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது படக்குழு. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்படும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து முக்கிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 2020-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT