ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ‘ஹிப் ஹாப்’ ஆதி இரண்டாவதாக நடித்த படம் ‘நட்பே துணை’. பார்த்திபன் தேசிங்கு இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சுந்தர்.சி - குஷ்புவின் அவ்னி மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது.
ஆதி ஜோடியாக அனகா நடித்த இந்தப் படத்தில், கரு.பழனியப்பன், ஹரிஷ் உத்தமன், ஷா ரா, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், கெளசல்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஆதியே இந்தப் படத்துக்கு இசையமைத்தார்.
விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூலைப் பெற்றது. குறிப்பாக, க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற ஹாக்கிப் போட்டி விறுவிறுப்பாக இருந்தது.
இந்நிலையில், ‘நட்பே துணை’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஆதி கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷண் நடிக்கிறார். தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘ஏ1 எக்ஸ்பிரஸ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கியது.
தெலுங்கிலும் ஆதியே இசையமைக்க, டென்னிஸ் ஜீவன் இயக்கி வருகிறார். சந்தீப் கிஷணின் வெங்கடாத்ரி டாக்கீஸ், பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் ஏஏ ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.