விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தால், அந்தப் படத்தை வாங்கி வெளியிட்ட கேரள விநியோகஸ்தர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் ‘பிகில்’. அட்லி இயக்கிய இந்தப் படத்தில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார் விஜய். ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம், 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டது.
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் வெளியானது. உலக அளவில் ஒரு வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ள இந்தப் படத்தில், தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இன்னும் 50 கோடி ரூபாய் தமிழகத்தில் வசூலித்தால் மட்டுமே, இது லாபமான படமாக அமையும்.
இந்நிலையில், ‘பிகில்’ படத்தால் கேரள விநியோகஸ்தர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 125 திரைகளுக்கு மேல் மாற்று மொழிப் படங்களை வெளியிடக்கூடாது என கேரள விநியோகஸ்தர்கள் சங்கத்தின் விதி உள்ளது.
ஆனால், விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் மற்றும் அதிக விலைக்கு விற்கப்பட்ட கேரள விநியோக உரிமை ஆகியவற்றால், ‘பிகில்’ படத்தை 200 திரைகளில் திரையிட்டனர். கேரள விநியோக உரிமையை மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் நடிகர் பிரித்விராஜ் இருவரும் பெற்றிருந்தனர்.
விதிகளை மீறி 200 திரைகளில் திரையிட்டதால், தற்போது மேஜிக் ஃப்ரேம்ஸ் மற்றும் பிரித்விராஜுக்கு அபராதம் விதித்துள்ளது கேரள விநியோகஸ்தர்கள் சங்கம். ‘பிகில்’ படத்தின் வசூலில் குறிப்பிட்ட சதவீதத்தை அபராதமாகக் கட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை அபராதம் கட்டத் தவறினால், வரும் காலங்களில் இருவரது படங்களுக்கும் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள ‘பிகில்’ படத்தில், கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, இந்துஜா, அம்ரிதா, வர்ஷா பொல்லம்மா, ரெபா மோனிகா ஜான், இந்திரஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.