தென்னிந்திய சினிமா

'தடம்' தெலுங்கு ரீமேக் தொடக்கம்: அருண் விஜய் கதாபாத்திரத்தில் ராம்

செய்திப்பிரிவு

தமிழில் அருண் விஜய் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'தடம்', 'ரெட்' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக்காகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் 'தடம்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக பெரும் விலைக்குத் தெலுங்கு ரீமேக் உரிமை விற்பனையானது. ஆனால், யார் வாங்கியுள்ளார்கள், யார் நடிக்கிறார்கள் என்ற விபரம் தெரியாமலேயே இருந்தது.

தற்போது, அதன் விபரங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் 'இஸ்மார்ட் ஷங்கர்' வெற்றியின் மூலம் முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் 'தடம்' ரீமேக்கில் நடிக்கவுள்ளார். 'ரெட்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 'தடம்' ரீமேக் தான் என்கிறார்கள் தெலுங்கு திரையுலகில்.

கிஷோர் திருமலா இயக்கும் இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ், மாளவிகா ஷர்மா ஆகியோர் ராமுடம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தின் பூஜை நேற்று (அக்டோபர் 30) நடைபெற்றுள்ளது. இதில் 'இஸ்மார்ட் ஷங்கர்' இயக்குநர் பூரி ஜெகந்நாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

'ரெட்' படத்தின் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'தடம்' ரீமேக்கான 'ரெட்' படத்தில் தான் ராம் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.

SCROLL FOR NEXT