தென்னிந்திய சினிமா

'ஒடியன்' தோல்வி: மஞ்சு வாரியர் போலீஸில் புகார் - ஸ்ரீகுமார் விளக்கம்

செய்திப்பிரிவு

ஸ்ரீகுமார் தன்னை மிரட்டி, அவதூறு பரப்புகிறார் என்ற மஞ்சு வாரியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இதற்கு இயக்குநர் ஸ்ரீகுமார் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

மோகன்லால், மஞ்சு வாரியர் நடித்த 'ஒடியன்' திரைப்படத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார். முன்னதாக இந்தத் திரைப்படத்தின் தோல்விக்கு மஞ்சு வாரியரும் காரணம் என ஸ்ரீகுமார் பதிவிட்டிருந்தார்.

இந்தப் புகார் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ள ஸ்ரீகுமார், "அன்பார்ந்த மஞ்சு. என்ன செய்யப்போகிறீர்கள்? எனது பல நண்பர்கள் உங்கள் மோசமான நடத்தை பற்றி எச்சரித்தும் நான் உங்களை நம்பினேன்.

மஞ்சு அவரது வீட்டை விட்டு வெளியேறியபோது அவரது வங்கிக் கணக்கில் ரூ.1500 ரூபாய் தான் இருந்தது. அவர் கவலையிலிருந்தார். அந்த நேரத்தில் நான் அவரது முதல் விளம்பரப் படப்பிடிப்புக்காக ரூ.25 லட்சத்துக்கான காசோலையைத் தந்தேன். நான் மட்டும்தான் உங்களுக்கு ஆதரவு தந்தேன் என்பதை மறந்துவிட்டீர்களா? எனது எதிரிகள் இன்று உங்கள் நண்பர்களாகிவிட்டார்கள். இன்னமும் அவர்களுக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி இருக்கிறது.

நான் சாதாரண குடிமகன். மஞ்சு வாரியரின் புகார் குறித்து ஊடகங்களில்தான் நான் பார்த்துத் தெரிந்து கொண்டேன். விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன். எனக்கும் மஞ்சுவுக்கும் தெரிந்த எல்லா உண்மைகளையும் விசாரணை அதிகாரிகளிடம் சொல்வேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT