தென்னிந்திய சினிமா

ஒரே ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கால் நிஜமாகவே பிரச்சினையா? - மோடிக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் பூரி ஜெகந்நாத்

செய்திப்பிரிவு

ஒரே ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கால் நிஜமாகவே பிரச்சினையா என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார் இயக்குநர் பூரி ஜெகந்நாத்.

தெலுங்குத் திரையுலகில் கமர்ஷியல் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பூரி ஜெகந்நாத். 'பத்ரி', 'போக்கிரி', 'சிறுத்தா', 'பிசினஸ் மேன்', 'டெம்பர்' உள்ளிட்ட பல வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான 'இஸ்மார்ட் ஷங்கர்' பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் பூரி ஜெகந்நாத். தற்போது பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பதிவிலும் வெளியிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் பூரி ஜெகந்நாத் கூறியிருப்பதாவது:

''இன்று உலகின் மிகப்பெரிய பிரச்சினை காலநிலை மாற்றம். இந்தக் காலநிலை மாற்றத்துக்குப் பல காரணங்கள் உள்ளன. பிளாஸ்டிக் அதில் ஒரு காரணம். அது மட்டுமே காரணமல்ல. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தடை செய்வதன் மூலம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது.

1960களில் பிளாஸ்டிக் கண்டுபிடிப்புக்குப் பின், மக்கள் அதை மனித இனத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகப் பார்த்தார்கள். ஏனென்றால் அதற்கு முன்பு வரை காகிதப் பைகள் அதிக அளவில் பயன்பட்டு வந்தன. பிளாஸ்டிக் தயாரிக்க மட்டும் எளிதல்ல, நீண்ட நாட்கள் இருக்கக்கூடியது, உறுதியானதும் கூட. உண்மையில் பிளாஸ்டிக்கின் அறிமுகத்துக்குப் பின் நாம் பல மரங்களையும், காடுகளையும் காப்பாற்றியுள்ளோம். அதன் மூலம் சுற்றுச்சூழலையும் காப்பாற்றி நம் சூழலியலை சமநிலையில் வைத்திருந்தோம்.

காலநிலை மாற்றத்துக்கான காரணம்

பிளாஸ்டிக்கால் பிரச்சினை அல்ல. ஒழுக்கமின்றி, சோம்பேறித்தனமான அணுகுமுறையால், பிளாஸ்டிக்கை தவறாக உபயோகித்த மனிதர்களும், அவர்கள் நமது சுற்றுச்சூழலைப் பொறுப்பற்ற, ஒழுங்கற்ற முறையில் அணுகியதுமே பிரச்சினை.

பிளாஸ்டிக்குக்கு மாற்றாகப் பருத்தி மற்றும் காகிதப் பைகளையே மீண்டும் உபயோகிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நாம் மீண்டும் மரங்களை வெட்ட வேண்டும். பருத்தி உற்பத்திக்கு விசாலமான விளைநிலங்கள் வேண்டும். இந்த இரண்டு விஷயங்கள் மீண்டும் நமது சுற்றுச்சூழல் அமைப்பில் ஸ்திரமில்லாத நிலையை ஏற்படுத்தும்.

கரியமில வாயுவும், மீத்தேன் போன்ற ஆபத்தான வாயுக்களை வெளியேற்றும் லட்சக்கணக்கான வாகனங்களும் சாலைகளில் உள்ளன. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் லட்சக்கணக்கான துறைகளும், தொழிற்சாலைகளும் உள்ளன. இரண்டு நூற்றாண்டுக்கு முன்னால் நமது ஜனத்தொகை ஒரு பில்லியன். இப்போது 8 பில்லியன் என பல மடங்கு அதிகரித்துள்ளது. மனிதர்கள் எவ்வளவு கரியமிலவாயுவை வெளிப்படுத்துவார்கள் என்று யோசியுங்கள். இந்த பூமியின் தொற்று மனிதர்களாகிய நாம் தான். நீங்கள் நம்புவீர்களோ, இல்லையோ, கால்நடைகளிலிருந்து வெளியேறும் வாயுக்களும் கூட காலநிலை மாற்றத்துக்கான காரணிதான்.

தீர்வுகளும் நடவடிக்கைகளும்

நம் உலகத்தில் நம்மிடம் தேவையான பிளாஸ்டிக் உள்ளது. அதை நாம் சாதுரியமாக, மறுசுழற்சிற்சி செய்து பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக்கை வெறுத்து அதைத் தடை செய்ய வேண்டாம். அதற்குப் பதில் பிளாஸ்டிக்கை ஒரு முறை பயன்படுத்திவிட்டுத் தூக்கிப் போடாமல், எப்படி மறுசுழற்சி செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை மக்களுக்குச் சொல்லித்தர வேண்டும். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நம்மிடம் சரியான கொள்கைகள் இருக்க வேண்டும்.

முதலில் நிறைய மரங்களை நட வேண்டும். காடு வளர்ப்பை அரசாங்க கொள்கையாகக் கொண்டு வர வேண்டும். நமது ஜனத்தொகையைப் பல வழிகளில் கட்டுப்படுத்த வேண்டும். ஜனத்தொகை வளர்ச்சியினால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் தாக்கத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும்.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசை பெரிய அளவில் குறைக்க, எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்த வேண்டும். இறைச்சி உற்பத்தியைக் குறைத்தால், பண்ணை விலங்குகளின் வளர்ப்பு குறையும். இதனால் அதிலிருந்து வெளியேறும் வாயுக்களின் அளவு குறையும். குறைந்த அளவு இறைச்சியை உட்கொள்ளும் மத்திய தரைக்கடல் பகுதியில் இருப்பவர்கள் பின்பற்றும் உணவு முறையைப் பின்பற்றினால் கணிசமான அளவில் காலநிலை ஸ்திரப்படுத்த பங்காற்ற முடியும்.

சலுகைகள்

எது எப்படியோ, நாம் சொல்வதை மக்கள் கேட்கமாட்டார்கள். காலநிலை மாற்றம் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். எதுவும் அவர்கள் தலையில் ஏறாது. ஆனால் அரசாங்க, பிளாஸ்டிக் சேகரிப்புக்கும், அதை மறுசுழற்சி செய்ய கொண்டு வருவதற்கும் சலுகைகள் அறிவித்தால் ஒவ்வொருவரும் அவர்களின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கத் தூய்மை இந்தியா வேலையைச் செய்வார்கள். அரசாங்க பிளாஸ்டிக்குக்குப் பணம் தந்தால், மக்கள் பிளாஸ்டிக்கை பணமாகப் பார்த்து தங்கள் வீடுகளில் சேகரிப்பார்கள். சூழலைக் குப்பையாக்க மாட்டார்கள்''.

இவ்வாறு பூரி ஜெகந்நாத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT