'தர்பார்' படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ரஜினி, நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க மும்பையிலே நடைபெற்றுள்ளது.
இந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு, அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க ஏ.ஆர்.முருகதாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இந்தப் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகவுள்ளார் அல்லு அர்ஜுன்.
முன்னதாக, ஸ்டுடியோ க்ரீன் - லிங்குசாமி - அல்லு அர்ஜுன் கூட்டணி இணைந்து படம் பண்ண இருந்தது. இந்தப் படத்தின் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமாகவிருந்தார் அல்லு அர்ஜுன். இதற்கான அறிமுகப் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஆனால், இந்தப் படம் தொடங்கப்படவில்லை.
அந்தப் படத்துக்குப் பதிலாக, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகத் திட்டமிட்டுள்ளார் அல்லு அர்ஜுன். அடுத்த ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'தர்பார்' படமும், அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்துள்ள 'அலா வைகுந்தபுரம்லோ' படமும் பொங்கலுக்குப் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.