'பிகில்' படத்தின் கேரள உரிமையைக் கைப்பற்றியுள்ளார் நடிகர் பிரித்விராஜ். அங்கு அதிக திரையரங்குகளில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் 'பிகில்'. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், ஷாரூக் கான், வருண் தவான், கரண் ஜோஹர், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. தமிழகத்தில் இதன் உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் கைப்பற்றிவிட்டது. தெலுங்கு உரிமையையும் பெரும் போட்டிக்கு இடையே படக்குழு விற்றுவிட்டது.
கேரளாவில் எப்போதுமே விஜய் படங்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும். தற்போது அதன் உரிமையைக் கடும் போட்டிக்கு இடையே பிரித்விராஜின் தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பதிவில், "அனைத்து விஜய் ரசிகர்களுக்கு, பிரித்விராஜ் ப்ரொடக்ஷன்ஸ், மேஜ்க் ஃப்ரேம்ஸ் இணைந்து, அட்லீ இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில், விஜய் நடித்திருக்கும் பிரம்மாண்டமான படைப்பான 'பிகில்' படத்தைக் கேரளா முழுவதும் இந்த தீபாவளி அன்று வெளியிடவிருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக திரையரங்குகளில் வெளியாகுமா?
சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற திரையுலக சங்கங்களின் கூட்டத்தில், இதர மொழி நடிகர்கள் படங்களைக் குறைவான திரையரங்குகளிலேயே வெளியிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஏனென்றால் விஜய் நடிப்பில் வெளியான 'சர்கார்' படம் அதிக திரையரங்குகளில் வெளியாகி சர்ச்சையானது.
இதனால் 'பிகில்' திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதர மொழி நடிகர்களின் மலையாள டப்பிங்கிற்கு 200 திரையரங்குகளுக்கு மேல் அளிக்கப்படக் கூடாது என்று கேரளாவில் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.