தென்னிந்திய சினிமா

பொங்கல் வெளியீடு போட்டி தொடக்கம்: மகேஷ் பாபு vs அல்லு அர்ஜுன்

செய்திப்பிரிவு

பொங்கல் வெளியீட்டுக்கான போட்டி இப்போதே தொடங்கப்பட்டுள்ளது. மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் எப்போதுமே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். தீபாவளி வெளியீட்டைத் தாண்டி இப்போதே பொங்கல் வெளியீட்டுக்குப் போட்டி தொடங்கியுள்ளது.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வந்த படமும், அனில் ரவிப்புடி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வந்த படமும் சங்கராந்தி வெளியீடு என்றே விளம்பரப்படுத்தி வந்தார்கள். ஆனால், இரண்டுமே பெரிய முதலீடு என்பதால் ஒரே தேதியில் வெளியாவது கடினம் எனத் தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில், த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'அலா வைகுந்தபுரம்லோ' திரைப்படம் ஜனவரி 12, 2020-ல் வெளியாகும் என அறிவித்தார்கள். இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்துள்ளனர். தமன் இசையமைத்து வரும் இந்தப் படத்தை கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஹரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

'அலா வைகுந்தபுரம்லோ' வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்ட சில மணிநேரத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் 'சரிலேரு நீக்கெவரு' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது. இதுவும் ஜனவரி 12, 2020-ல் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. அனில் ரவிப்புடி இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜயசாந்தி, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் மகேஷ் பாபு உடன் நடித்து வருகிறார்கள்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இந்தப் படத்தை ஏ.கே எண்டர்டைன்மண்ட்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் மகேஷ் பாபு எண்டர்டெயின்மண்ட் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. ஒரே நாளில் இரண்டு படங்களும் போட்டி போட்டு தங்களது படத்தின் வெளியீட்டை உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT