'96' தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சமந்தா
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '96'. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் 7 ஸ்கிரீன் நிறுவனம் வெளியிட்டது. கோவிந் வசந்தா இசையமைத்த இந்தப் படத்துக்கும், இதில் இடம்பெற்ற பாடல்களுக்கும் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இந்தப் படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது.
மேலும், இதன் தமிழ் ரீமேக்கை கடும் போட்டிக்கு இடையே தில் ராஜு கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து பிரேம்குமாரே இயக்க, விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் மற்றும் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது '96' தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுள்ளது. இதனை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "படப்பிடிப்பு முடிந்தது. கடந்த காலங்களை விட இன்னும் சிறப்பாகச் செயல்பட எனக்குச் சவால் விடும் இன்னொரு முக்கியமான படம் மற்றும் கதாபாத்திரம்.
அன்றாடம் அற்புதங்களை நிகழ்த்திக்காட்டக் கூடிய ஒரு குழுவுடன் பணிபுரிவது பாக்கியம். எனக்கு மிகவும் பிடித்த குழுவினரான பிரேம்குமார் மற்றும் சர்வானந்துக்கு நன்றி. ஜானுவாக சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்போதும் நன்றியுடையவளாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார் சமந்தா.