தென்னிந்திய சினிமா

நெட்ஃபிளிக்ஸ் வெப் சீரியஸில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள வெப் சீரியஸில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நெட் ஃபிளிக்ஸில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பிய வெப் சீரியஸ் 'லஸ்ட் ஸ்டோரிஸ்'. 4 குறும்படங்கள் அடங்கிய இந்த வெப் சீரியஸை அனுராக் காஷ்யப், சோயா அக்தர், தீபகர் பானர்ஜி மற்றும் கரண் ஜோஹர் இயக்கியிருந்தார். இதில் ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, மனிஷா கொய்ராலா, விக்கி கெளசல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தற்போது இந்த வெப் சீரியஸை தெலுங்கில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம். இதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியைப் போல ஆந்தாலஜி பாணியில் உருவாகும் இதில் ஒரு கதையை 'ஓ பேபி' இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்குகிறார். இதில் நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன் மூலம் வெப் சீரியஸ் உலகிலும் கால் பதிக்கிறார் அமலா பால். இதுபற்றி அமலா பால், "கடந்த சில வருடங்களாகச் சவால் நிறைந்த கதாபாத்திரங்களைத் தான் தேர்வு செய்து நடித்து வருகிறேன். 'ஆடை' படத்துக்குக் கிடைத்த வரவேற்பும், ஆதரவும் மேலும் புதிதாக நடிக்க என்னைத் தூண்டியுள்ளது. அந்த கையில் புதிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளேன்.

நந்தினி ரெட்டியுடன் பணிபுரிவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களை மையமாகக் கொண்டு கதை சொல்லும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் உள்ளேன். என்னை இதில் நடிக்கத் தேர்வு செய்த நெட் ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார் அமலா பால்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT