தென்னிந்திய சினிமா

தெலுங்கு நடிகர் வேணு மாதவ்: அறிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்

செய்திப்பிரிவு

தெலுங்கு சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் புதன்கிழமை (இன்று) மதியம் 12.20க்கு உயிரிழந்தார். அவருக்கு வயது 39.

அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்:

* சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டிஆர், நிதின், அல்லுர் அர்ஜுன், ரவிதேஜா என தெலுங்கின் அத்தனை முன்னணி நடிகர்களோடும் வேணு மாதவ் நடித்துள்ளார்

* ஹங்காமா, பூகைலாஸ், பிரேமாபிஷேகம் என மூன்று படங்களில் நாயகனாகவும் வேணு மாதவ் நடித்துள்ளார். ஒருகட்டத்தில் தெலுங்கின் முன்னணி நகைச்சுவை நடிகரான பிரம்மானந்தத்துக்குப் பிறகு வேணு மாதவே பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தார். அவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்தது.

* ஒரு வருடத்தில் சராசரியாக 7லிருந்து 8 படங்கள் வரை நடித்து வந்தார். ஒரே நாளில் ஆறு ஷிஃப்டுகளில் வேலை பார்த்து, சரியாக சாப்பிடாததால் தான் உடல்நலம் குன்றியதாக அவரே தெரிவித்துள்ளார்.

* தான் நடித்த சில படங்களை, தன் பிள்ளைகளுடனேயே பார்க்க முடியவில்லை என்பதால், இனி ஆபாச நகைச்சுவையில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்து சில படங்களை தானே ஒதுக்கிவிட்டதாக வேணு மாதவ் கூறியுள்ளார்.

* சில வருடங்களுக்கு முன்பே வேணு மாதவ் இறந்துவிட்டார் என பல ஊடகங்களில் செய்திகள் பரவி அதைப் பற்றி வேணு மாதவே நகைச்சுவையாகப் பேசியிருக்கிறார். அதே நேரத்தில் அப்படி செய்தி வெளியிட்ட சில ஊடகங்கள் மீது வழக்கும் தொடர்ந்திருந்தார்.

* என்.டி.ஆரின் அபிமானி வேணு மாதவ். என்.டி.ஆர் கலந்து கொண்டு ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் முன்பு மிமிக்ரி செய்து அவரது பாராட்டைப் பெற்றதை என்றும் பெருமையுடன் நினைவுகூர்வார். அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஹிம்மாயத் நகர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் வேணு மாதவ் சில காலம் டெலிபோன் ஆப்ரேட்டராக சம்பளத்துக்கு வேலை செய்து வந்தார்.

* கடந்த டிசம்பர் மாதம், தான் பிறந்த கோடாட் தொகுதியிலிருந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் இருந்தார். ஸ்வச் பாரத் இயக்கத்தின் நட்சத்திரத் தூதர்களில் ஒருவராகவும் இருந்தார்

* தன் சம்பாத்தியத்தில் பத்து வீடுகளைக் கட்டியுள்ளார் வேணு மாதவ். அதில் 9 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் அவருக்கு முதல் சினிமா வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் அச்சி ரெட்டி, இயக்குநர் கிருஷ்ணா ரெட்டி ஆகியோரின் பெயரை அனைத்து வீடுகளுக்கும் வைத்துள்ளார். 'அச்சி வச்சின கிருஷ்ணா நிலையம்' என்பதே அனைத்து வீடுகளுக்கும் இவர் வைத்திருக்கும் பெயர்.

*மிகவும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் வேணு மாதவ். எனக்கு ஈகோ அதிகம், கோபம் அதிகம், என்னை யாரும் நிர்பந்திக்கவோ, அவமானப்படுத்தவோ முடியாது. எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ நான் மட்டுமே. சினிமாவில் வாய்ப்பு வரவில்லையென்றாலும் இதே மனநிலையில்தான் இருப்பேன். என் பி.காம் படிப்புக்கு எங்காவது வேலை செய்து சம்பாதிப்பேன் என்று பேசியிருக்கிறார்

*பாலகிருஷ்ணாவின் கவுதமி புத்ர சதகரணி, சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 ஆகிய படங்கள் வெற்றி பெற வேண்டும் என திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்து வேண்டிக் கொண்டவர் வேணு மாதவ்.

தொகுப்பு: கார்த்திக் கிருஷ்ணா

SCROLL FOR NEXT