தென்னிந்திய சினிமா

மம்முட்டி பட விளம்பரத்துக்கு ஃப்ளெக்ஸ் ஃபோர்டுகள் கிடையாது: தயாரிப்பாளர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

மம்முட்டி நடிப்பில் வெளியாகவுள்ள ’ஞானகந்தர்வன்’ என்ற படத்துக்கு ஃப்ளெக்ஸ் போர்டில் விளம்பரங்கள் வராது என அந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ரமேஷ் பிஷரோடு கூறியுள்ளார்.

சென்னையில், சுபஸ்ரீ என்ற இளம்பெண் விளம்பர பேனர் தலையில் விழுந்து மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும், இனி தங்களுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தங்கள் தொண்டர்கள், ரசிகர்களிடம் கூறிவருகின்றனர்.

தற்போது மலையாள சினிமாவிலும் இது எதிரொலித்துள்ளது. சுபஸ்ரீயின் மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பிஷரோடி, தன் படத்துக்கு அப்படியான ஹோர்டிங் விளம்பரம் வைக்கப்படமாட்டாது என்று அறிவித்துள்ளார். மலையாள சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரம் ஒருவரின் படத்துக்கு இது புதிது.

"ஒரு படத்தின் வெளியீட்டுக்கு முன் மிகப்பெரிய ஹோர்டிங் கட் அவுட் வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எனது படத்துக்கு கேரளா முழுவதும் ஹோர்டிங் வைக்க மட்டுமே 30 லட்சம் ரூபாய் செலவழித்தேன். இன்னும் அதிகமாக செலவிடவும் சில தயாரிப்பாளர்கள் முன்வருகின்றனர். ஆனால் பிஷரோடி போல மற்ற தயாரிப்பாளர்களும் முடிவெடுத்தால் என்னைப் போன்ற தயாரிப்பாளர்கள் மகிழ்வோம். ஏனென்றால் இப்படியான விளம்பரம் மட்டுமே ஒரு படத்தின் நல்ல வசூலுக்கு உதவாது" என்கிறார் மலையாள சினிமாவில் மற்றொரு தயாரிப்பாளர் சி.ஹெச்.முகமது.

இயக்குநர் பிரதீப் நாயர் பேசுகையில், "நான் பங்கெடுத்த ஒரு படத்துக்கு பத்து லட்சம் ரூபாய் வரை ஃப்ளெக்ஸ் போர்ட் வைக்க செலவழித்தோம். கோழிகோடில் ஒரு சில போர்டுகள் வைக்க மட்டுமே 80,000 வரை செலவழித்தது நினைவிருக்கிறது. நம் விளம்பரங்களை வைக்க உகந்த இடங்கள் விளம்பர நிறுவனங்களின் கட்டுப்பாடில் இருக்கும். அவர்களுக்கு நாம் வாடகைக்கும் பணம் தர வேண்டும். ஆனால் மம்முட்டி போன்ற பெரிய நட்சத்திரத்தின் படத்துக்கு கவனம் ஈர்க்க பெரிய விளம்பர போர்டுகள் தேவையில்லாமல் போகலாம். ஆனால் சின்னப் படங்களுக்குத் தேவை" என்கிறார்.

SCROLL FOR NEXT