ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் மோகன்லாலுக்கு நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
ஜீத்து ஜோசப் - மோகன்லால் இணைப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. 2015-ம் ஆண்டு வெளியான இந்த மலையாளப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பல்வேறு மொழிகளில் இது ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இதன் ரீமேக்கில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.
தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்து, கனடா, கேரளா மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவருக்கும் கதை பிடித்திருப்பதால் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று தெரிவித்தார்கள். மலையாளத்தில் 'ஹே ஜூடு' படத்துக்குப் பிறகு அவர் நடிக்கவுள்ள மலையாளப் படம் இதுவாகும்.
கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முடித்துவிட்டுத்தான் மோகன்லால் படத்தில் முழுமையாக கவனம் செலுத்தவுள்ளார் ஜீத்து ஜோசப்.