எப்போதும் யாரையும் தவறாகப் பேசமாட்டார் பிரபாஸ் என்று 'சாஹோ' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜமெளலி தெரிவித்தார்.
சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சாஹோ'. யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
'பாகுபலி' படத்துக்குப் பிறகு, பிரபாஸ் நடிப்பில் வெளிவரவுள்ளதால் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை படக்குழுவினர் விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
ஹைதராபாத்தில் 'சாஹோ' படத்தின் பிரம்மாண்டமான விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. இதில் இயக்குநர் ராஜமெளலி மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் ராஜமெளலி பேசும் போது, "எல்லா நாயகர்களின் ரசிகர்களுமே அவர்களுக்குப் பிடித்த அந்த நாயகனின் படம் ஹிட் ஆகவேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் பிரபாஸ் படம் ஹிட் ஆக வேண்டும் என்று எல்லா நாயகர்களின் ரசிகர்களுமே நினைப்பார்கள்.
ஏனென்றால் பிரபாஸ் எப்போதும் யாரையும் தவறாகப் பேசமாட்டார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு பாசிட்டிவ் உணர்வு இருக்கும். அந்த உணர்வு தான் அவருக்கு இவ்வளவு ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளது.
பிரபாஸுக்கு தொலைநோக்குப் பார்வை அதிகம். ’பாகுபலி’ படத்தில் நடிக்கும்போதே தனது அடுத்த படம் என்ன என்பது பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டார். ’பாகுபலி’ கண்டிப்பாக வெற்றி பெறும். இதற்குப் பிறகு என்ன, எப்படி நடிப்பது என்று யோசித்துக்கொண்டே இருந்தார்.
ஒரு நாள் மிகவும் மகிழ்ச்சியாக வந்தார். சுஜித் வந்து கதை சொன்னார் என்று மிகுந்த ஆர்வத்துடன் பேசினார். எனக்கு இதில் பிடித்த விஷயம் என்னவென்றால் ஒரு பிரம்மாண்ட படத்துக்குப் பின், இன்னொரு பெரிய இயக்குநரிடம், பெரிய படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. சுஜித் சொன்ன கதையை மட்டுமே அவர் நம்பினார்.
‘பாகுபலி’க்குப் பிறகு இதுபோல ஒரு படம் கொடுத்தால் மக்களுக்குப் பிடிக்கும், என் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நம்பிச் செய்தார். சுஜித் இளைஞர். பலருக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தைக் கையாள முடியுமா என்று யோசித்தனர்.
ஆனால், முதல் போஸ்டர் வரும்போதே எனக்குத் தெரிந்துவிட்டது. பின் டீஸ்ர், ட்ரெய்லர் என பார்த்தபோது சுஜித்தின் திறமை என்னவென்று அனைவருக்கும் புரிந்திருக்கும். சுஜித் நீங்கள்தான் இந்தப் படத்தின் முதுகுத்தண்டு. மிகத் திறமையாக அனைத்தையும் கையாண்டிருக்கிறீர்கள். முழு மனதுடன் உங்களைப் பாராட்டுகிறேன்” என்றார் இயக்குநர் ராஜமெளலி.