தென்னிந்திய சினிமா

'பேரன்பு' படத்துக்கு ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை? மம்மூட்டி ரசிகர்களுக்கு தேசிய விருது நடுவர் பதில்

செய்திப்பிரிவு

66-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பல நல்ல படங்கள் புறக்கணிக்கப்பட்டதாக திரைப்படத் தேர்வு நடுவர் குழு மீது பலதரப்பிலிருந்தும் தாக்குதல் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

நடுவர் தலைவர் ராகுல் ராவைலைக் குறிவைத்து பலரும் சமூக வலைத்தளங்களில் வசைகளைக் கட்டவிழித்து விட்டு வருகின்றனர்.

ராம் இயக்கத்தில் வெளியான 'பேரன்பு' படத்துக்கு நடிகர் மம்மூட்டிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மம்மூட்டி ரசிகர்கள் கொந்தளித்தனர். விருதுகளின் லைவ் ஒளிபரப்பு செய்யப்பட்ட போதே மம்மூட்டி ரசிகர்கள் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டனர்.

விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மம்மூட்டி, பேரன்பு ஆகிய ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டு ஆதரவுகள் பெருகின.

ஆனால் திடீரென ஒரு ரசிகர் கும்பல் சமூக வலைதளங்களில் நுழைந்து நடுவர் தலைவர் ராகுல் ராவைல் மீது கடும் வசைகளைப் பிரயோகித்து கருத்துகளைப் பதிவு செய்தார். மம்மூட்டியின் 'பேரன்பு' படம் புறக்கணிக்கப்பட்டதாக ராகுல் ராவைல் மீது சொந்தத் தாக்குதல் விமர்சனங்கள் கடும் வசைச்சொற்களில் இறங்கின.

இதனையடுத்து நடிகர் மம்மூட்டிக்கு ராகுல் ரவைல் ஒரு குறிப்பு ஒன்றைப் பதிவு செய்து அதை அவர் சமூக வலைதளப்பக்கத்திலும் வெளியிட்டார்.

அதில், “மம்மூட்டி அவர்களே, உங்கள் ரசிகர்களிடமிருந்து நிறைய வெறுப்பு உமிழும் பதிவுகள் என்னை நோக்கிச் செலுத்தப்படுகின்றன, அதில் பலதும் மிக மோசமான வசைச்சொற்கள். 'பேரன்பு' படத்துக்கு ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை என்று என்னைக் கேட்டு தொல்லை செய்கின்றனர். ஆகவே நான் நேரடியாகவே கூறுகிறேன், முதலில் நடுவரின் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது. இரண்டாவதாக உங்கள் 'பேரன்பு' படம் உங்கள் பிராந்தியக் குழுவினராலேயே நிராகரிக்கப்பட்ட ஒன்று. அதனால் மையக் குழுவில் அது இடம்பெறவில்லை. உங்கள் ரசிகர்கள் அல்லது உங்கள் பக்தர்கள் இழந்த ஒன்றிற்காக சண்டையிடுவதை நிறுத்த வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து மம்மூட்டி, “சாரி சார், எனக்கு இதைப் பற்றித் தெரியாது. ஆனாலும் நடந்தவற்றுக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT