'சாஹோ' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாறியுள்ளதால், நானியின் 'கேங் லீடர்' செப்டம்பர் 13 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாஸ் நடிப்பில், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'சாஹோ' முதலில் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படம் தற்போது ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருந்த நானியின் 'கேங் லீடர்' திரைப்படம் செப்டம்பர் 13-ம் தேதி வெளியாகிறது.
வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனாலும் நானி அதைப் பற்றிக் கவலைப்படாமல் 'சாஹோ' படத்துக்கான தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 'சாஹோ' நமது படம் என்றும், அது வெற்றிபெற்றால் அது நமது கொண்டாட்டம் என்றும் நானி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 'சாஹோ' வெளியீட்டுக்காக தங்கள் படங்களின் வெளியீட்டுத் தேதிகளை மாற்றிக்கொண்ட படங்களுக்கு நன்றி சொல்லும் வகையில் பிரபாஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் "ஆகஸ்ட் 30 அன்று 'சாஹோ' வெளியீட்டுக்காக தங்கள் படங்களின் வெளியீட்டுத் தேதிகளை மாற்றியிருக்கும் அனைத்து நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு மிகப்பெரிய நன்றி. உங்கள் அனைவருக்கும் 'சாஹோ' குழு கடன் பட்டுள்ளது. உங்கள் படங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் என் அன்பும், வணக்கங்களும்" என்று தெரிவித்தார்.
'கேங் லீடர்' படத்தின் இயக்குநர் '24' படத்தை இயக்கிய விக்ரம் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.