நடிகர் நானி இணை தயாரிப்பில் வெளியான 'ஆவ்' படம் தேசிய விருது பெற்றது குறித்து நானி தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
66-வது திரைப்பட தேசிய விருதுகள் வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டன. மொத்தம் 419 திரைப்படங்கள் இம்முறை போட்டியிட்டன. 31 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த கிராபிக்ஸ் மற்றும் சிறந்த ஒப்பனைக் கலைஞர் என இரண்டு விருதுகளை 'ஆவ்' தெலுங்கு திரைப்படம் வென்றது.
இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் நானி மற்றும் பிரஷாந்தி. இவர் 'பாகுபலி' படத்தின் ஆடை வடிவமைப்பாளர். இது குறித்து நானி தனது ட்விட்டர் பக்கத்தில், "வால் போஸ்டர் சினிமா குழு இன்று மிகவும் பெருமை கொண்டுள்ளது. எங்கள் முதல் தயாரிப்புக்கு இரண்டு தேசிய விருதுகளை. இதை விட வேறென்ன வேண்டும். ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி. நடுவர்களுக்கு நன்றி. விருது வென்றவர்களுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
'ஆவ்' திரைப்படம் வெளியாகும்போதே விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளையும், பாலியல் சீண்டல், போதைப் பழக்கம், குழந்தைகள் மீதான பாலியன் வன்முறை உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளையும் இந்தப் படம் பேசுகிறது. தன்பால் ஈர்ப்பாளர்கள் பற்றிப் பேசிய முதல் தெலுங்கு திரைப்படமும் இதுவே.