தென்னிந்திய சினிமா

மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்: தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு

செய்திப்பிரிவு

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தங்களது அடுத்த மூன்று படங்கள் பற்றிய அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளது. தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்கள் மூவரும் இந்த மூன்று படங்களில் நடிக்கவுள்ளது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவீன், ரவிஷங்கர், மோகன் ஐந்து வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ். மிகக் குறுகிய காலத்தில் ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ், ரங்கஸ்தலம், டியர் காம்ரேட் உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் டோலிவுட்டில் கவனம் பெற்றுள்ளனர்.

தற்போது மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர் என, தெலுங்கு திரையுலகின் மூன்று முன்னணி நட்சத்திரங்களை வைத்து தாங்கள் தயாரிக்கப் போகும் அடுத்த மூன்று படங்களை இறுதி செய்துள்ளனர்.

இதில் மகேஷ் பாபு படத்தின் இயக்குநர் மட்டும் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. அல்லு அர்ஜுன் படத்தை சுகுமாரும், ஜூனியர் என்.டி.ஆர் படத்தை, கே.ஜி.எஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலும் இயக்குகின்றனர்.

அல்லு அர்ஜுன் படம் அக்டோபர் மாதம் துவங்குகிறது. ஜூனியர் என்.டி.ஆர் படம் அடுத்த வருட இறுதியில்தான் துவங்கப்படவுள்ளது. இந்தப் படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆர் குச்சிபுடி நடனத்தில் தீவிர பயிற்சி எடுத்துக்கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT