நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ஸ்பானிஷ் நாட்டு நடிகை நடிக்கவுள்ளார்.
பரோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தைகளுக்கான படத்தை நடிகர் மோகன்லால் இயக்கவுள்ளார். முழுக்க 3-டியில் உருவாகும் இந்தப் படம் குழந்தைகளுக்கான மாயாஜாலப் படமாக இருக்கும் என மோகன்லால் கூறியுள்ளார்.
போர்ச்சுகல், ஸ்பெய்ன், ஆப்பிரிக்கா, இந்தியா நாடுகளில் கடல் வாணிபம் நடைபெற்ற காலமே இந்தப் படத்தின் கதைக்களம். இந்தப் படத்தில் ஸ்பெய்ன் நாட்டு நடிகை பாஸ் வேகா நடிக்கவுள்ளார். ஸ்பானிஷ் மொழியில் பல படங்களில் நடித்து பிரபலமான இவர், அடுத்ததாக ராம்போ லாஸ்ட் ப்ளட் படத்திலும் நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெறுகிறது. இந்தப் படம் பற்றி பேசுகையில் மோகன்லால், "இந்தப் படத்தின் கதை இயக்குநர் ஜிஜோ சொன்னதன் அடிப்படையில் உருவானது. போர்த்துகீய ஆய்வாளர் வாஸ்கோட காமாவின் புதையல்களை வைத்திருக்கும் ஒருவனைப் பற்றிய கதை அது.
அவர் கதையைச் சொல்லும்போது என்னால் இயக்க முடியுமா? என்று யோசித்தேன். அவர் நான்தான் இயக்க வேண்டும் என்று சொன்னார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் 3-டி படமான மை டியர் குட்டிச்சாத்தானின் இயக்குநர் ஜிஜோ என்பது குறிப்பிடத்தக்கது.