திங்கட்கிழமை விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 ராக்கெட்டுக்கு 'பாகுபலி' என்று செல்லப்பெயர் வைத்ததில் நடிகர் பிரபாஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண் கலத்தை அனுப்பியது. அது நிலவை சுற்றிவந்து 312 நாட்கள் ஆய்வு செய்தது. அப்போது நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.
சந்திரயான் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் ‘சந்திரயான்-2’ திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக அதிநவீன வசதிகளுடன் ரூ.604 கோடியில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டது.
இதை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 15-ம் தேதி திங்கள்கிழமை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அன்று சாத்தியப்படாமல் போகவே, பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் திங்கட்கிழமை ஏவப்பட்டது.
43.4 மீட்டர் உயரமும் 640 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட்டை 'பாகுபலி' என்று செல்லப்பெயர் வைத்து அழைத்து வந்தனர் விஞ்ஞானிகள்.
இது குறித்து, நடிகர் பிரபாஸ், "இஸ்ரோவின் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டத்தில் நம் அனைவருக்கும் பெருமையான நாள் இன்று. மேலும், இவ்வளவு பிரம்மாண்டமான, பல வருடங்கள் கடின உழைப்பில் தயாரான, இந்தியாவில் முதல் முறையாக இப்படி உருவாகும் ஒரு ராக்கெட், 'பாகுபலி' என்று அறியப்படுவது, ஒட்டுமொத்த 'பாகுபலி' குழுவுக்கும் கூடுதல் பெருமை" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.