நடிகர் ராஜ்கிரண் மலையாளத்தில் அறிமுகமாகவிருக்கிறார். மம்முட்டி நாயகனாக நடிக்கும் 'ஷைலாக்' என்ற படத்தில் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
அஜய் வாசுதேவ் இயக்கத்தில், கோபி சுந்தர் இசையமைக்கிறார். 'ராஜாதி ராஜா', 'மாஸ்டர் பீஸ்' படங்களுக்குப் பிறகு அஜய்யின் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் மூன்றாவது படம் இது. 1989-ல் நடிக்க ஆரம்பித்த ராஜ்கிரண், இதுவரை தமிழ் தவிர வேறு மொழிப் படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மம்முட்டியுடன் நடிக்கிறார் மீனா. 1991-ல் 'என் ராசாவின் மனசிலே' படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனா. ராஜ்கிரணுக்கு அது நாயகனாக முதல் படம். தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் உருவாகும் என்று தெரிகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.
இந்தப் படத்தில் ராஜ்கிரண் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மம்முட்டி, "ராஜ்கிரண் மிகவும் யோசித்து தேர்வு செய்யும் நடிகர். அவருக்கு இந்தப் படத்தில் வலிமையான கதாபாத்திரம் உள்ளது" என்றார்.