'பிக் பாஸ்' தெலுங்கின் மூன்றாவது சீசனை நடிகர் நாஜார்ஜுனா தொகுத்து வழங்கவுள்ளார். ஜூலை 21 முதல் ஸ்டார் மா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
இதுகுறித்து நாகார்ஜுனா, "நடிப்பு இல்லை, யதார்த்தம் மட்டுமே" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நிகழ்சிக்கான டீஸரோடு பகிர்ந்துள்ளார்.
முதல் சீசனை நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நடிகரி நானியும் தொகுத்து வழங்கினர். மா தொலைக்காட்சியை ஸ்டார் குழுமம் வாங்குவதற்கு முன், அதன் பெரும்பான்மையான பங்கை நாகார்ஜுனா வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியை, தெலுங்கு மக்களிடையே நன்மதிப்பைக் கொண்டிருக்கும் அக்கினேனி குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கவிருப்பது பெரிய சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'பிக் பாஸ்' தமிழ் மற்றும் மராத்தி பதிப்புகள் ஏற்கெனவே ஒளிபரப்பாகி வரும் நிலையில் தெலுங்குப் பதிப்பு எப்போது வரும் என்று பல வாரங்களாகவே அங்கு ரசிகர்கள் காத்திருந்தனர். முதல் இரண்டு பிக் பாஸ் சீசன்களும் பெரும் வரவேற்பைப் பெற்றதே இதற்குக் காரணம்.
அதே போல கடந்த இரண்டு சீசன்களில் பொதுமக்களில் யாராவது ஒருவரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருப்பார்கள். ஆனால் இம்முறை திரைத்துறை, சின்னத்திரை, ஃபேஷன் துறை என பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளனர்.