விபத்தில் சிக்கிவிட்டதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார், தெலுங்கு நடிகை ஆதா ஷர்மா.
செவ்வாய்கிழமை மாலை ஒரு தெலுங்கு படப்பிடிப்பில், ஆதா ஷர்மா பைக்கில் இருந்து கீழே விழுந்துவிட்டதாகவும், அப்போது பஸ் ஒன்று அவர் மீது மோதிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
அத்தகைய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் ஆதா ஷர்மா. "இந்த செய்தி எப்படி பரவியது என்றே எனக்கு தெரியவில்லை. பைக் ஓட்டுவது போல ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தேன். எப்படி தவறான செய்தி கசிந்தது என புரியவில்லை.
படப்பிடிப்பின்போது வெயில் அதிகமாக இருந்தது. வெயிலின் தாக்கத்தால் எனக்கு காய்ச்சலும் இருந்தது. அதனால் நான் படப்பிடிப்பு முடிந்ததும் சென்று தூங்கிவிட்டேன்.
எனக்கு விபத்து ஏற்பட்டதாக வந்த செய்தியை அடுத்து ,எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன. தூக்கத்தால் நான் எந்த அழைப்பையும் எடுத்துப் பேசவில்லை. இதனால் செய்திக்கு உடனடியாக மறுப்பு தெரிவிக்க முடியவில்லை" என்று ஆதா ஷர்மா கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான தெலுங்கு படமான 'S/O சத்யமூர்த்தி' மற்றும் கன்னடப் படமான 'ராணா விக்ரமா' உள்ளிட்ட படங்களில் ஆதா ஷர்மா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.